Sunday, 14 April 2019

நிலவின் மறுபக்கம்....


நிலா. நிலவினை உவமையாக வைத்து பல கவிதைகள், கதைகள், பாடல்கள் கேட்டிருப்போம் ஆனால் நிலவின் மறுபுறத்தை யாரும் கண்டிருக்க முடியாது ஆம் நாம் நிலவின் ஒரு புறத்தை மட்டுமே காண்கிறோம். பூமியில் இருந்து பார்க்கும் பொழுது நிலவின் ஐம்பத்தி ஒன்பது  விழுக்காடு (59%) மட்டுமே காணலாம். நிலவு தன்னை தானே சுற்றிக்கொள்ளும் காலமும் பூமியினை சுற்றும் காலமும்  ஒரே அளவாய் இருக்கும் எனவே பூமியில் இருந்து நிலவின் ஒரு புறத்தை மட்டுமே காண இயலும்.


நிலவு பூமியினை சுற்றி வரும் பொழுது சூரியன், பூமி, நிலவு மூன்றும் வெவ்வேறு நிலைகளில் (phases) இருக்கும். நிலவின் இருப்பிடத்தை வைத்து அமாவாசை, பௌர்ணமி என நிகழும். மூன்றும் நேராக சந்திக்கும் பொழுது இந்த நிலைகள் உண்டாகும். அதே போல் தான் சூரிய கிரகணம், சந்திர கிரகணம்  உண்டாகும் .



 ஏன் பௌர்ணமி அமாவாசை  மாத மாதம் வருகிறது ஆனால் கிரகணம் குறிப்பிட்ட கால இடைவெளி கழித்தே அரங்கேறுகிறது?

 இதன் காரணத்தை அறிய ஒரு சிறிய செயல்முறை மூலம் அறியலாம் ஒரு காகிதத்தில் சூரியன், பூமி, நிலவு வரைந்தால் ஒரே தளத்தில் (plane) மூன்றும் இருக்காது. நிலவு பூமியினை சுற்றி வரும் பாதை ஐந்து டிகிரி கோணத்தில் இருக்கும். கிரகணம் அரங்கேற மூன்றும் நேர் கோட்டில் இருக்கவேண்டும். ஆனால் அமாவசை பௌர்ணமி அவ்வாறு இல்லை. எனவே கிரகணம், அமாவாசை பௌர்ணமி போல் மாத மாதம் நிகழாது.



Tuesday, 9 April 2019

பூமிக்கு என்ன வயசாச்சு?

      நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகளை நம்மால் கணிக்க முடியும் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் எந்த தேதி, எத்தனை மணிக்கு பிறந்தது என்பதை நம்மால் அறிய முடியும். இதுவே அக்குழந்தை வளர்ந்து வயது மூப்பினால் இறந்தாலோ அல்லது கொலை செய்யப்பட்டு பல நாள் கழித்து உடல் கிடைத்தால் கூட எப்பொழுது  உயிர் பிரிந்தது என மருத்துவர்களால் கணிக்க முடியும் பிணக்கூறு (POST-MORTEM ) ஆய்வின் படி உடல் எந்த அளவு சிதையுற்றுள்ளது என்பதை வைத்து கூற இயலும். 
     
 இதே வரலாற்றை எடுத்துக்கொண்டால் கல்வெட்டுகள், குறிப்புகள், நாணயங்கள், கோவில்கள், இவைகளை வைத்து ஒரு மன்னனை பற்றியும் அவன் ஆட்சி முறை பற்றியும்  அறியலாம். தொல்பொருள்களை தொல்பொருள் வல்லுநர்கள் கதிரியக்கக்கரிம அளவைமுறை (RADIO-CARBON DATING METHOD) மூலம் அதனுடைய காலத்தினை கண்டறிவர்.



    இதெல்லாம் மனித இனம் விட்டுச்சென்ற குறியீடுகள் மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் பூமியின் அகவை 4.54 பில்லியன் வருடங்கள் ஆகும்.

அதனை எப்படி கண்டுபிடித்தனர்?
       
   பூமி உருவாகி இன்றைய காலகட்டம் வரை நடைபெற்ற சம்பவங்களை அதனுடைய வரம்பு அளவுகள் வைத்து ஒரு வருடகாலத்தினுள் பிரித்தால் மனித இனம்  உருவாகியது வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31 இரவு 11.36 மணிக்கு தான். 



      பூமியில் தோன்றும் பாறைகளில் கதிரியக்க தனிமங்கள் (RADIO-ACTIVE ELEMENTS) இருக்கும் அவை ஒவ்வொரு பாறைகளில் ஒரு குறிப்பிட்ட தரநிலையில் (STANDARD) இருக்கும். ஒரே அணுவெண்ணையும், வேறுபட்ட திணிவெண்ணையும் கொண்ட அணுவை ஓரிடத்தான்(ISOTOPES) என   கூறுவர். அதில் சில ஓரிடத்தான் நிலையற்றதாக இருக்கும். அது கதிரியக்கத்தின் மூலம் நிலையானதாக மாறும். அப்போது கதிரியக்க அளவை முறை மூலம் கதிரியக்க ஓரிடத்தனிமத்தின் அளவையும் அதன் சிதைவினால் உருவான விளைப்பொருட்களின் அளவையும் (DAUGHTER CELLS) ஒப்பிட்டு வயதினை கண்டறிவர். இவ்வாரே பூமியின் வயது பாறைகளின் வயது தொல்பொருள்களின் வயது என ஆய்வாளர்கள் கண்டறிவர்.

 கண்டறியும் முறை
  கோன்ட்ரைட் (CHONDRITE) என்ற பாறை உருவாகும் பொழுது  யூரேனியம் என்ற  தனிமமும் அதில் உருவாகியது. ஆனால் அது ஒரு நிலையற்ற கதிரியக்க தனிமமாகும். அது கதிரியக்கம் (RADIATION) மூலம் ஈயம் (LEAD) ஆக மாறியது. அவ்வாறு மாற 4.54 பில்லியன் வருடங்கள் ஆகும். அவ்வாறு ஒரு கோன்ட்ரைட் பாறையில் இருக்கும்  யூரேனியம் மற்றும் ஈயம்  வைத்து தான் பூமியின் வயதினை கண்டறிந்தனர்.

நன்றி

https://biomimicry.net/earths-calendar-year-4-5-billion-years-compressed-into-12-months/
https://en.wikipedia.org/wiki/Radiometric_dating

Friday, 5 April 2019

நெகிழி சூழ் உலகு

இறைவன் எங்கே இருப்பான் ??
      இறைவன் எங்கும் நிறைந்திருப்பான், தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என பழமொழி கூறுவர். ஆனால், இறைவனைக்காட்டிலும் நெகிழி (plastic) அனைத்து இடங்களிலும் நிரம்பியிருக்கிறது. கடந்த ஐம்பது வருடங்களாக   நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளது. நெகிழியின் கழிவுகளும் அதிகரித்துக்கொண்டே  செல்கிறது ஏன் என்றால் நெகிழி மக்கும் தன்மை அற்றது. சாலை ஓரங்களில்  புல் மேயும்  மாடுகள் வயிற்றில் நெகிழி கழிவுகள் கண்டறியப்பட்டன.  
   

  அது மட்டுமின்றி கடலிலும் நெகிழி கழிவுகள் அதிகளவு காணப்படுகின்றன. 2016-ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி கடலில் 2050-க்குள்  மீன்களை காட்டிலும் அதிக அளவு நெகிழி கழிவுகள் இருக்கும் என கூறுகிறது. மாடுகள் மட்டுமா கடல் வாழ்  உயிரினங்கள் பலவற்றின் வயிற்றிலும் நெகிழி இருக்கிறது. இது உணவு சங்கிலியை பாதிக்கும். 

              

      ஹவாய் தீவின் அருகே கடற்கரையில் அதிக அளவு நெகிழி கழிவுகள் இருக்கின்றன. அங்கு சுடரொளி களியாட்டம் (camp fire) செய்யும் மனிதர்களால் ஏற்படும் வெப்பத்தினால் நெகிழி உருகி கரையில் இருக்கும் மண்துகள்களோடு சேர்ந்து பாறையாகவே மாறியுள்ளன. அவ்வாறு உருவாகும் பாறையினை பிளாஸ்டிகிலோமேரேட் (plastiglomerate) என அழைக்கின்றனர் புவி அறிவியல் வல்லுநர்கள்.  


      
   கடலில் வாழும் நுண்ணுயிர்கள் படிவங்களாக மாறி பல வருடங்கள் கழித்து தொல்லுயிர் எச்சங்களாகவும் (Fossils), கல்லெண்ணய் (petrol) எரிபொருளாகவும் மாறுகின்றன. ஒரு சில தீவுகளில் பறவைகளின் எச்சங்கள் ஒன்று சேர்ந்து பாஸ்பரஸ்  போன்ற தனிமங்கள் அதிகம் கொண்ட தாதுவாக மாறுகிறது. 

      இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் நேர்மறையான தன் சுவடுகளை விட்டு செல்கிறது. ஆனால் மனிதர்கள் ஆன நாம் என்ன விட்டு செல்லப்போகிறோம்  ?

Thursday, 4 April 2019

எரிமலை வெடிப்பும், சோடா பாட்டில் நுரையும்


      ஐபில் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது, அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சதம் அடிக்கிறார்களோ இல்லையோ சூரியன் தினம் தினம் சதம் அடிக்கிறது. சரி வெயிலின் தாக்கத்தை எப்படி குறைக்கலாம் என ஒரு  பெட்டிக்கடைக்கு சென்று போவொண்டோ   புட்டி (அந்நிய குளிர்பானங்களை தவிர்ப்போம்) வாங்கி திறந்தால் நுரையாய் வாயுக்கள் (CO2) வெளி வந்தன.


            அதற்கும் புவி அறிவியலுக்கும் என்ன  சம்பந்தம் உள்ளது ????

     குளிர் பானங்கள் தயாரிக்கும் பொழுது அதிக அழுத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு சேர்த்து அடைக்கப்படும். அப்போது குளிர் பானமும் வாயுவும் ஒரே நிலையில் (phase) இருக்கும். புட்டியின் மூடியியை திறக்கும் பொழுது உள் இருக்கும் அழுத்தம் குறையும் எனவே, கார்பன் டை ஆக்சைடு வாயுவாக மாறி வெளியே நுரையுடன் பொங்கும். வெளியே இருக்கும் அழுத்தம் சமம் ஆகும் வரை இந்த வாயுக்கள் வெளி வரும்.





       பூமிக்கு அடியில் உருவாகும் பாறைக்குழம்புகளில் பல்வேறு வாயுக்கள் இருக்கும் ஆனால் அந்த ஆழத்தில் அந்த வாயுக்கள் அனைத்தும் பாறைக்குழம்புகளோடு ஒரே நிலையில் (phase) இருக்கும். பாறைக்குழம்புகள் அதனை சுற்றி இருக்கும் பாறைகளோடு அடர்த்தி குறைவு. எனவே, அது மேல் எழும். அவ்வாறு மேல் எழும் பொழுது, அழுத்தம் குறையும். அழுத்தம் குறையும் பொழுது ஒன்றாக பாறைக்குழம்புகளோடு இருந்த வாயுக்கள் தனியாக பிரியும். இந்த நிகழ்வினால் தான் எரிமலை வெடிப்பு உருவாகிறது. 


நன்றி: 

Wednesday, 3 April 2019

அழிவில் பிறந்த கனிமம்

 அழிவில் பிறந்த கனிமம் 

  மனித குலம் தன்னை தற்காத்து கொள்ள பல நூற்றாண்டுகளாக ஆயுதங்களை கண்டுபிடித்து வருகிறது. தொழில் நுட்பங்களின் வளர்ச்சியால் அதி நவீன ஆயுதங்களும் வர தொடங்கின. அவ்விதம் மிகவும் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சூலை 16, 1945 இல், நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் டிரினிட்டி (குறியீட்டு பெயர்) தளத்தில் முதல் வெற்றிகரமான சோதனை நடத்தப்பட்டது. 
அந்த வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றல் அது வரை கண்டிராத அளவு இருந்தது. அந்த ஆற்றலினால் பாலை வனத்தில் இருந்த மண் துகள்கள் உருகி, ஒரு புதிய பச்சை நிற கதிரியக்க கனிமம் (radio-active mineral) உருவாகியது. அழிவில் உருவாகிய இந்த கனிமத்தின் பெயர் டிரினிடைட் (Trinitite).

source:

Kutti Story - தொல்லுயிர் எச்சம்

            பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர்  வாழ்ந்து அழிந்த உயிரினம் பற்றி இன்று எப்படி அறிகிறோம்??          65 கோடி ஆண்டுகளுக்கு முன...