Wednesday, 31 March 2021

Kutti Story - தொல்லுயிர் எச்சம்

            பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர்  வாழ்ந்து அழிந்த உயிரினம் பற்றி இன்று எப்படி அறிகிறோம்??

         65 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து அழிந்த உயிரினம்  டைனோசர் ஆனால் அதை வைத்து படமே எடுத்து விட்டோம்....அதற்கெல்லாம் ஆதாரம்?

 தொல்லுயிர் எச்சங்கள்...

   பூமியில்  முதல் உயிரினம் 380 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக கூறப்படுகிறது .....  அதன் நேரடி தொல்லுயிர் எச்சம் இல்லை என்றாலும்  அதனுடைய தொல்லுயிர் சுவடுகள் (trace  fossil ) சில இடங்களில் கிடைக்கிறது.... பூமியில் முதல் தொல்லுயிர் எச்சங்களாக  350 கோடி ஆண்டு பழமை வாய்ந்த சயனோ பாக்டீரியாக்கள் (Cyano Bacteria) ஆஸ்திரேலியா கண்டத்தில் கிடைத்துள்ளது......

Cyano Bacteria in western Australia


பூமியில்  தோன்றும் அனைத்து  உயிரினங்களும் தொல்லுயிர் எச்சங்களாக மாறாது .....அதற்கென சில காரணிகள் அமைய வேண்டும்.. ஒரு உயிரினம் இறந்த உடன் அதன் உடல் மண்ணினால் மூட படவேண்டும்....அது ஆக்சிஜன்  அற்ற சூழலில் இருந்தால்தான் அழுகி போகாது... இது போல் காரணிகள் அமைந்தால் ஒரு உயிரினம் தொல்லுயிர் எச்சங்களாக மாறும் வாய்ப்பு அதிகம்....சில சமயங்களில் முழு உடலமைப்புகளும் சில நேரங்களில் கடினஉடல் அங்கங்கள் மட்டும் எச்சங்களாக மாறும்....



இவ்வாறு கிடைக்கும் தொல்லுயிர் எச்சங்கள் வைத்து நம் பூமியில் ஏற்பட்ட மாறுதல்கள் காலநிலை என எண்ணற்ற ஆய்வுகள் செய்யலாம்...

உதாரணமாக, அரியலூர் பகுதிகளில் நிறைய சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன....அங்கு நிறைய சுண்ணாம்பு பாறைகள் கிடைக்கும்... அந்த பகுதி 65 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடலால் சூழ்ந்த பகுதி...அங்கு பல தொல்லுயிர் எச்சங்கள் இன்றளவும் கிடைக்கிறது....

உயிரினம் தொல்லுயிர் எச்சங்களாக கிடைக்கின்றன....ஆனால் , உயிர்களை படைத்ததாக கூறப்படும்  கடவுள் பற்றிய ஆதாரங்கள் மனிதன் தோன்றி  நாகரிகம் வளர்ந்த பின்பு, மனிதனால் உருவாக்கப்பட்ட செப்பேடுகள்,சிலைகள் போன்றவற்றில் தான்  கிடைக்கிறது....

யாரை படைத்தது யாரோ???????

Friday, 3 July 2020

kutti story- டெல்டா

காவேரி டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு....
மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டு , டெல்டா பகுதியினை நீர் சென்றடைந்தது...
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மீத்தேன் எரிவாயு திட்டம் எதிர்த்து போராட்டம்...

இப்படி செய்திகளில் டெல்டா என்ற வார்த்தையை அடிக்கடி கண்டிருப்போம் அல்லவா ....

டெல்டா என்றால் என்ன? எவ்வாறு உருவாகிறது?

மலையில் பிறக்கின்ற ஆறு, தான் செல்லும் பாதையை தாமே உருவாக்கி, அதன் எதிரில் உள்ள  தடைகளை எல்லாம் தகர்த்து அதனையும் தன்னுடன் சேர்த்து ஓட்டமாய் ஓடி மலையை கடந்து சமதள பகுதியை  அடைந்து அதனை வளைந்தும் நெளிந்தும் கடந்து தன் சக்தியை இழந்து கடலில் போய்  சேரும். அவ்வாறு கடலில் போய் சேரும் முன்  தன்னுடன் அடித்து கொண்டுவரப்பட்ட மணல்கள் அனைத்தையும் விட்டுச்செல்லும் அவ்வாறு படியும் மணல் கணிதத்தில் வரும் Δ டெல்டா குறியீடு போல் பிரிந்தும், விரிந்தும் அமையும். எனவே தான்  அதனை டெல்டா நிலப்பரப்பு என்கிறோம். தமிழில் கழிமுகம் என கூறுவர் ....

                                                                      Source :Wiki 


 எகிப்து நாட்டில் ஓடும்  நைல் நதி மத்திய தரை கடல் பகுதியில் கலக்கும் பொழுது இந்த வடிவம் கண்டறியப்பட்டது எனவே அதற்கு தான்   முதலில் டெல்டா என்ற பெயர் உருவானது...

Friday, 8 May 2020

Kutti Story - தக தக தங்கவேட்டை


   பாறையில் பல கனிமங்கள் இருக்கும் அதில், அடர்த்தி  அதிகம் மற்றும் வேதியியல் மாற்றத்தை  எதிர்க்கும் தன்மையுள்ள (Chemically Resistant) திண்கனிமங்கள் (Heavy Minerals) எந்த வித மாற்றமும் இன்றி வண்டலாக (Sediments) மாறி ஈர்ப்பு விசை மற்றும் ஆற்றின் போக்கால் அடித்து செல்லப்படும். அவ்வாறு அடித்து செல்லக்  கூடிய கனிமங்கள் ஆற்றங்கரை ஓரமாகவோ அல்லது கடற்கரையிலோ சேரும். ஒரு பாறையில்  அங்கங்கே சிதறி கிடந்த திண் கனிமங்கள்  எல்லாம் இயற்கையின் விளையாட்டால் ஒரு சேர சேர்ந்துள்ளது. அதனை Placer  Deposit  என கூறுவர் அதனோடு அடர்த்தி குறைவான சின்னஞ்சிறு கனிமங்கலும் இருக்கும். அந்த Deposit-யை ஜலித்து எடுத்தால் அந்த  திண் கனிமத்தை பிரித்துவிடலாம்.



 தங்கத்தின் அடர்த்தி அதிகம் அதே போல் அது வேதியியல் மாற்றமும் அடையாது எனவே அது placer deposit  ஆக ஆற்றங்கரை ஓரம் சேரும். சாதாரணமாக தங்கம் ஒரு  பாறையில் இருக்கிறது என்றால் ஆங்காங்கே சிதறி தான் இருக்கும். ஒரு டன் பாறையில் ஒரு சில கிராம் தான் தங்கம் கிடைக்கும். இயற்கையின் விளையாட்டால் இப்பொழுது placer  deposit  தங்கம் ஒரு சேர சேர்ந்திருக்கும்.



19-ஆம் நூற்றாண்டின் நடுவில் California  மாகாணத்தில் இவ்வாறு கிடைக்கும் தங்கம் கண்டறியப்பட்டது. எனவே மக்கள் அனைவரும் அங்கே கூடி  சண்டை போட்டு பிரித்து எடுத்தனர். அதனை CALIFORNIA GOLD RUSH  என கூறுவர்.

இந்தியாவிலும் கூட சில இடங்களில் இவ்வாறு placer  deposits  கிடைக்கிறது ஆனால் இங்கோ சட்டமே வேறு!! மண்ணிற்கு/நிலத்திற்கு கீழே எது கிடைத்தாலும் அது அரசாங்க கஜானாவையே  சேரும்!!!

இப்பொழுது பல நவீன உபகரணங்கள் கொண்டு திண் கனிமங்களை பிரித்து எடுக்கின்றனர்.

 இதே போல் வைரமும்  (Diamond)  கிடைக்கும் Placer  Deposit  ஆக !!

Wednesday, 6 May 2020

kutti story - நிலவின் கறையும், இந்திய மேற்கு கடற்கரையும்

     "பால் போல் உள்ள வெண்ணிலவில் 
         பார்த்தால் சிறு கறை இருக்கு "


   முதலில் நிலவு எப்படி உருவானது என பார்ப்போம். பல அறிவியல் கருத்துக்கள் இருந்தாலும் பெரும்பாலும் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டது Impact theory. பூமியின் மீது செவ்வாய் கிரக அளவு உள்ள ஒரு கிரக மண்டலம் (Planetesimal) மோதியதால் பூமியில் இருந்து பிரிந்து உருவானதே நிலவு. 


அந்த நிலவில் பார்த்தாலே தெரியும் பால் போல் Highland, அதில் ஆங்காங்கே  கருப்பு நிற Maria திட்டுகளும் தென்படும். அந்த Highland ஆனது Anorthosite என்னும் பாறையாலும், Maria என்பது basalt  என்னும் பாறையாலும் ஆனது. அந்த basalt என்னும் பாறை வகை பெரும்பாலும் அடர் நிற கனிமங்களால் ஆனது. அதில் மிக முக்கியமாக இல்மனைட் (Ilmenite) எனும் கனிமம் உள்ளது. ஆகையால் தான் நிலவில் கறை  போன்று தென்படுகிறது.




   இந்திய துணைக்கண்டம் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து பிரிந்து ஆசியா கண்டத்தை நோக்கி வந்த பொழுது உருவானது தான் Deccan volcanic provinces, தக்காண பீடபூமியின் பெரும்பகுதிகள். அது Basalt  ரக பாறையினால் உருவானது. அதில் இருந்து உருவான மணல்களில்  இல்மனைட் கனிமம் அதிகமாக இருக்கும் அதனால் தான் இந்திய மேற்கு கடற்கரை பெரும்பாலும் கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது...






Kutti Story - மணவாளக்குறிச்சி மோனசைட்

    சணல் கயிறு திரிப்பதில் இந்தியா முன்னோடி நாடாக விளங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி தென்னிந்தியாவிலிருந்து சணல் இறக்குமதி செய்கிறது. அங்கே கடற்கரை மணலில் கயிற்றை திரித்து உலர செய்வார்கள். கப்பலில் ஏற்றும்போது இலவச இணைப்பாக கடற்கரை மணலும் சேர்ந்தே ஏற்றுமதி ஆனது. அது கயிறு திரிப்போர்க்கு பெரும் பொருட்டாக தெரியவில்லை சொல்ல போனால் எடை கூடுவதால் அதனை அவர்கள் லாபமாகவே பார்த்தனர். 



1909 ஆம் ஆண்டு Dr. Schomberg என்ற ஜெர்மன் வேதியியல் ஆராய்ச்சியாளர் அந்த மணலில் கருப்பும் மஞ்சளுமாக (Monazite) இருப்பதை கவனித்து அதனை ஆய்வு செய்தார் அதில் திண் கனிமங்கள் (Heavy minerals) இருப்பதை கண்டறிந்தார். திண் கனிமங்கள் பெரும்பாலும் கடற்கரை மணலில் தான் இருக்கும் அதனுடைய பயன்கள் ஏராளம். பின் இந்தியா வந்த அவர் இங்கு இரண்டு ஆலைகளை நிறுவி அதனை பிரித்து எடுக்கும் பணியை தொடங்கினார். அங்கு பெரும்பாலும் தோரியம் (Thorium) மற்றும் இல்மனைட்  (Ilmenite) கனிமங்கள் இருந்தன.

இதன் பின்னரே, இந்திய அரசாங்கம் கடற்கரை முழுவதும்  ஆராய்ந்து எங்கெல்லாம் கனிமங்கள் இருக்கிறது என்று கண்டறிந்தது. 

Tuesday, 31 December 2019

மரியானா அகழி

பூமியில் ஆழமான பகுதி பசிபிக் பெருங்கடலில் உள்ளது கிட்டதட்ட 11,000 மீட்டர் ஆழமான பகுதி அது அதனை மரியானா அகழி (Mariana Trench) என கூறுவர். அதில் நம் இமயமலையினை (8848m) வைத்தால் வெளியே சுத்தமாய் தெரியாது. அந்த அளவு ஆழமான அகழி இரு கடல் தட்டுகளின் மோதலால் உருவானவை ஆகும். 
மனிதனால் ஸ்கூபா நீச்சல் மூலம் சராசரியாக 40 மீட்டர் ஆழம் வரை தான் செல்ல முடியும். ஆனால் எகிப்து நாட்டைச் சார்ந்த ஒருவர் 305 மீட்டர் ஆழம் வரை சென்றுள்ளார் அதுவே இன்றளவும் சாதனையாக கருதப்படுகிறது.
1960 இல் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் பிரத்யேக நீர்மூழ்கி மூலம் உலகின் அழமான பகுதியை அடைந்தனர். 2014 , ஆம் ஆண்டு டைட்டானிக் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் அவர்கள் தனியே தன்னந்தனியே ஒரு பிரத்யேக நீர்மூழ்கி மூலம் மரியான அகழிக்கு ஒரு பயணம் மேற்கொண்டார் அங்கே ஒரு சில மாதிரிகளும், புகைப்படங்களும் எடுத்து வந்தார்..
இந்த பயணங்களில் ஒரு வியப்பூட்டும் தகவல் அந்த ஆழத்திலும் உயிரினங்கள் உள்ளன.

Monday, 30 December 2019

ஓசோன் படலம் ஒரு பார்வை.......

ஓசோன் O3.. ஆக்சிஜன் O2….....
வளிமண்டலம் Troposphere, Stratosphere, Mesosphere, Thermosphere என வகைப்படும்.

அதில் அடுக்குமண்டலத்தில் (Stratosphere) தான் ஓசோன் படலம் உள்ளது அது தரையில் இருந்து சுமார் 15km முதல் 35 Km வரை இருக்கும்.
சுவாரஸ்யம் என்னவென்றால் ஓசோன் படலம் உருவாக காரணமே புற ஊதா கதிர்கள் தான். ஆனால் முழுதாக ஒரு படலம் உருவான பின்பு அந்த புற ஊதா கதிரையே உள்ளே விடவில்லை.
ஆம், புற ஊதா கதிர்கள் ஆக்சிஜன் மீது பட்டு O2 ஆனது இரண்டு O ஆக பிரியும். அந்த O.... O2 உடன் சேர்ந்து O3 ஆக மாறும் இவ்வாறே ஓசோன் படலம் உருவானது.


சரி , 1. இந்த ஓசோன் துளைக்கு காரணம் என்ன?
2. ஓசோன் துளைக்கும் CFC வாயுக்களுக்கும் என்ன தொடர்பு?
3. ஏன் ஓசோன் துளை தென் துருவத்தில் மட்டும் உள்ளது?
CFC யில் உள்ள குளோரின் ஓசோனுடன் வினை புரிந்து Cl + O3 -> ClO + O2 என மாறும்.
பின், ClO+ O -> Cl + O2 என மாறும் திரும்ப அந்த Cl ஓசோனுடன் வினை புரியும் இது ஒரு சுழற்சி வினை. இவ்வாறு ஓசோன் படலம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும்.
எப்பொழுதும் இயற்கை சமநிலையை நாடும் அதனால் வளிமண்டலத்தில் உள்ள NO2 உடன் Cl சேர்ந்தால் குளோரின் ஓசோனை தொல்லை செய்யாதிருக்கும்.
ஆனால் N02 ஆனது வளிமண்டலத்தில் உள்ள மேகங்களோடு சேர்ந்து NAT crystals ( Nitric Acid Trihydrate) என உருவாகி பனியாக பொழியும் ஆனால் அடிவெளிப் (Troposphere) பகுதியினை அடையும் பொழுது மற்ற இடங்களில் பனி உருகி மறுபடியும் NO2 அடுக்குமண்டலத்திற்கே திரும்பும். ஆனால் தென் துருவமானது மிகவும் குளிர்ந்த பகுதி எனவே அங்கு அந்த NAT crystals பனிப்பொழிவாக பெய்யும். இதனால் NO2 வளிமண்டலத்தில் அளவு குறையும்.
NO2 ஆனது அடுக்குமண்டலத்தில் (Stratosphere) இல்லை என்றால் Cl குளோரினின் ஆட்டம் தான், தொடர்ந்து ஓசோனை தாக்கும். எனவே ஓசோன் படலம் அதன் அடர்த்தி குறையும் அதுவே ஓசோன் துளை எனப்படுகிறது.

வட துருவத்தில் கடல் பகுதி தான் அதிகம் ஆனால் தென் துருவத்தில் அண்டார்டிகா கண்டம் உள்ளதால் அது மிகவும் குளிர்வாக இருக்கும் கடல் பகுதியைக் காட்டிலும். எனவே, தான் தென் துருவத்தில் ஓசோன் துளை காணப்படுகிறது.


Sunday, 14 April 2019

நிலவின் மறுபக்கம்....


நிலா. நிலவினை உவமையாக வைத்து பல கவிதைகள், கதைகள், பாடல்கள் கேட்டிருப்போம் ஆனால் நிலவின் மறுபுறத்தை யாரும் கண்டிருக்க முடியாது ஆம் நாம் நிலவின் ஒரு புறத்தை மட்டுமே காண்கிறோம். பூமியில் இருந்து பார்க்கும் பொழுது நிலவின் ஐம்பத்தி ஒன்பது  விழுக்காடு (59%) மட்டுமே காணலாம். நிலவு தன்னை தானே சுற்றிக்கொள்ளும் காலமும் பூமியினை சுற்றும் காலமும்  ஒரே அளவாய் இருக்கும் எனவே பூமியில் இருந்து நிலவின் ஒரு புறத்தை மட்டுமே காண இயலும்.


நிலவு பூமியினை சுற்றி வரும் பொழுது சூரியன், பூமி, நிலவு மூன்றும் வெவ்வேறு நிலைகளில் (phases) இருக்கும். நிலவின் இருப்பிடத்தை வைத்து அமாவாசை, பௌர்ணமி என நிகழும். மூன்றும் நேராக சந்திக்கும் பொழுது இந்த நிலைகள் உண்டாகும். அதே போல் தான் சூரிய கிரகணம், சந்திர கிரகணம்  உண்டாகும் .



 ஏன் பௌர்ணமி அமாவாசை  மாத மாதம் வருகிறது ஆனால் கிரகணம் குறிப்பிட்ட கால இடைவெளி கழித்தே அரங்கேறுகிறது?

 இதன் காரணத்தை அறிய ஒரு சிறிய செயல்முறை மூலம் அறியலாம் ஒரு காகிதத்தில் சூரியன், பூமி, நிலவு வரைந்தால் ஒரே தளத்தில் (plane) மூன்றும் இருக்காது. நிலவு பூமியினை சுற்றி வரும் பாதை ஐந்து டிகிரி கோணத்தில் இருக்கும். கிரகணம் அரங்கேற மூன்றும் நேர் கோட்டில் இருக்கவேண்டும். ஆனால் அமாவசை பௌர்ணமி அவ்வாறு இல்லை. எனவே கிரகணம், அமாவாசை பௌர்ணமி போல் மாத மாதம் நிகழாது.



Tuesday, 9 April 2019

பூமிக்கு என்ன வயசாச்சு?

      நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகளை நம்மால் கணிக்க முடியும் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் எந்த தேதி, எத்தனை மணிக்கு பிறந்தது என்பதை நம்மால் அறிய முடியும். இதுவே அக்குழந்தை வளர்ந்து வயது மூப்பினால் இறந்தாலோ அல்லது கொலை செய்யப்பட்டு பல நாள் கழித்து உடல் கிடைத்தால் கூட எப்பொழுது  உயிர் பிரிந்தது என மருத்துவர்களால் கணிக்க முடியும் பிணக்கூறு (POST-MORTEM ) ஆய்வின் படி உடல் எந்த அளவு சிதையுற்றுள்ளது என்பதை வைத்து கூற இயலும். 
     
 இதே வரலாற்றை எடுத்துக்கொண்டால் கல்வெட்டுகள், குறிப்புகள், நாணயங்கள், கோவில்கள், இவைகளை வைத்து ஒரு மன்னனை பற்றியும் அவன் ஆட்சி முறை பற்றியும்  அறியலாம். தொல்பொருள்களை தொல்பொருள் வல்லுநர்கள் கதிரியக்கக்கரிம அளவைமுறை (RADIO-CARBON DATING METHOD) மூலம் அதனுடைய காலத்தினை கண்டறிவர்.



    இதெல்லாம் மனித இனம் விட்டுச்சென்ற குறியீடுகள் மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் பூமியின் அகவை 4.54 பில்லியன் வருடங்கள் ஆகும்.

அதனை எப்படி கண்டுபிடித்தனர்?
       
   பூமி உருவாகி இன்றைய காலகட்டம் வரை நடைபெற்ற சம்பவங்களை அதனுடைய வரம்பு அளவுகள் வைத்து ஒரு வருடகாலத்தினுள் பிரித்தால் மனித இனம்  உருவாகியது வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31 இரவு 11.36 மணிக்கு தான். 



      பூமியில் தோன்றும் பாறைகளில் கதிரியக்க தனிமங்கள் (RADIO-ACTIVE ELEMENTS) இருக்கும் அவை ஒவ்வொரு பாறைகளில் ஒரு குறிப்பிட்ட தரநிலையில் (STANDARD) இருக்கும். ஒரே அணுவெண்ணையும், வேறுபட்ட திணிவெண்ணையும் கொண்ட அணுவை ஓரிடத்தான்(ISOTOPES) என   கூறுவர். அதில் சில ஓரிடத்தான் நிலையற்றதாக இருக்கும். அது கதிரியக்கத்தின் மூலம் நிலையானதாக மாறும். அப்போது கதிரியக்க அளவை முறை மூலம் கதிரியக்க ஓரிடத்தனிமத்தின் அளவையும் அதன் சிதைவினால் உருவான விளைப்பொருட்களின் அளவையும் (DAUGHTER CELLS) ஒப்பிட்டு வயதினை கண்டறிவர். இவ்வாரே பூமியின் வயது பாறைகளின் வயது தொல்பொருள்களின் வயது என ஆய்வாளர்கள் கண்டறிவர்.

 கண்டறியும் முறை
  கோன்ட்ரைட் (CHONDRITE) என்ற பாறை உருவாகும் பொழுது  யூரேனியம் என்ற  தனிமமும் அதில் உருவாகியது. ஆனால் அது ஒரு நிலையற்ற கதிரியக்க தனிமமாகும். அது கதிரியக்கம் (RADIATION) மூலம் ஈயம் (LEAD) ஆக மாறியது. அவ்வாறு மாற 4.54 பில்லியன் வருடங்கள் ஆகும். அவ்வாறு ஒரு கோன்ட்ரைட் பாறையில் இருக்கும்  யூரேனியம் மற்றும் ஈயம்  வைத்து தான் பூமியின் வயதினை கண்டறிந்தனர்.

நன்றி

https://biomimicry.net/earths-calendar-year-4-5-billion-years-compressed-into-12-months/
https://en.wikipedia.org/wiki/Radiometric_dating

Friday, 5 April 2019

நெகிழி சூழ் உலகு

இறைவன் எங்கே இருப்பான் ??
      இறைவன் எங்கும் நிறைந்திருப்பான், தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என பழமொழி கூறுவர். ஆனால், இறைவனைக்காட்டிலும் நெகிழி (plastic) அனைத்து இடங்களிலும் நிரம்பியிருக்கிறது. கடந்த ஐம்பது வருடங்களாக   நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளது. நெகிழியின் கழிவுகளும் அதிகரித்துக்கொண்டே  செல்கிறது ஏன் என்றால் நெகிழி மக்கும் தன்மை அற்றது. சாலை ஓரங்களில்  புல் மேயும்  மாடுகள் வயிற்றில் நெகிழி கழிவுகள் கண்டறியப்பட்டன.  
   

  அது மட்டுமின்றி கடலிலும் நெகிழி கழிவுகள் அதிகளவு காணப்படுகின்றன. 2016-ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி கடலில் 2050-க்குள்  மீன்களை காட்டிலும் அதிக அளவு நெகிழி கழிவுகள் இருக்கும் என கூறுகிறது. மாடுகள் மட்டுமா கடல் வாழ்  உயிரினங்கள் பலவற்றின் வயிற்றிலும் நெகிழி இருக்கிறது. இது உணவு சங்கிலியை பாதிக்கும். 

              

      ஹவாய் தீவின் அருகே கடற்கரையில் அதிக அளவு நெகிழி கழிவுகள் இருக்கின்றன. அங்கு சுடரொளி களியாட்டம் (camp fire) செய்யும் மனிதர்களால் ஏற்படும் வெப்பத்தினால் நெகிழி உருகி கரையில் இருக்கும் மண்துகள்களோடு சேர்ந்து பாறையாகவே மாறியுள்ளன. அவ்வாறு உருவாகும் பாறையினை பிளாஸ்டிகிலோமேரேட் (plastiglomerate) என அழைக்கின்றனர் புவி அறிவியல் வல்லுநர்கள்.  


      
   கடலில் வாழும் நுண்ணுயிர்கள் படிவங்களாக மாறி பல வருடங்கள் கழித்து தொல்லுயிர் எச்சங்களாகவும் (Fossils), கல்லெண்ணய் (petrol) எரிபொருளாகவும் மாறுகின்றன. ஒரு சில தீவுகளில் பறவைகளின் எச்சங்கள் ஒன்று சேர்ந்து பாஸ்பரஸ்  போன்ற தனிமங்கள் அதிகம் கொண்ட தாதுவாக மாறுகிறது. 

      இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் நேர்மறையான தன் சுவடுகளை விட்டு செல்கிறது. ஆனால் மனிதர்கள் ஆன நாம் என்ன விட்டு செல்லப்போகிறோம்  ?

Thursday, 4 April 2019

எரிமலை வெடிப்பும், சோடா பாட்டில் நுரையும்


      ஐபில் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது, அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சதம் அடிக்கிறார்களோ இல்லையோ சூரியன் தினம் தினம் சதம் அடிக்கிறது. சரி வெயிலின் தாக்கத்தை எப்படி குறைக்கலாம் என ஒரு  பெட்டிக்கடைக்கு சென்று போவொண்டோ   புட்டி (அந்நிய குளிர்பானங்களை தவிர்ப்போம்) வாங்கி திறந்தால் நுரையாய் வாயுக்கள் (CO2) வெளி வந்தன.


            அதற்கும் புவி அறிவியலுக்கும் என்ன  சம்பந்தம் உள்ளது ????

     குளிர் பானங்கள் தயாரிக்கும் பொழுது அதிக அழுத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு சேர்த்து அடைக்கப்படும். அப்போது குளிர் பானமும் வாயுவும் ஒரே நிலையில் (phase) இருக்கும். புட்டியின் மூடியியை திறக்கும் பொழுது உள் இருக்கும் அழுத்தம் குறையும் எனவே, கார்பன் டை ஆக்சைடு வாயுவாக மாறி வெளியே நுரையுடன் பொங்கும். வெளியே இருக்கும் அழுத்தம் சமம் ஆகும் வரை இந்த வாயுக்கள் வெளி வரும்.





       பூமிக்கு அடியில் உருவாகும் பாறைக்குழம்புகளில் பல்வேறு வாயுக்கள் இருக்கும் ஆனால் அந்த ஆழத்தில் அந்த வாயுக்கள் அனைத்தும் பாறைக்குழம்புகளோடு ஒரே நிலையில் (phase) இருக்கும். பாறைக்குழம்புகள் அதனை சுற்றி இருக்கும் பாறைகளோடு அடர்த்தி குறைவு. எனவே, அது மேல் எழும். அவ்வாறு மேல் எழும் பொழுது, அழுத்தம் குறையும். அழுத்தம் குறையும் பொழுது ஒன்றாக பாறைக்குழம்புகளோடு இருந்த வாயுக்கள் தனியாக பிரியும். இந்த நிகழ்வினால் தான் எரிமலை வெடிப்பு உருவாகிறது. 


நன்றி: 

Kutti Story - தொல்லுயிர் எச்சம்

            பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர்  வாழ்ந்து அழிந்த உயிரினம் பற்றி இன்று எப்படி அறிகிறோம்??          65 கோடி ஆண்டுகளுக்கு முன...